தமிழகம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேற்றிரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாமக்கல்லில் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 3 மணிக்கு பிறகு தான் விஜய் அங்கிருந்து கிளம்பினார்.
இதற்கிடையே கரூர் வேலுசாமிபுரத்தில் நண்பகல் 12 மணி முதலே தொண்டர்கள், ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சார பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால், இரவு 7.15 மணிக்குதான் பிரச்சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.
ஏற்கனவே குறுகிய இடமான அங்கு விஜய் பேச ஆரம்பித்தபோது, அவரது மைக் வேலை செய்யவில்லை. அவரது பேச்சை கேட்பதற்காக பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சார பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் நெரிசலில் சிக்கி மூச்சு திணறினர்.
இதனால், விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். இதனால் பேச்சை நிறுத்திய விஜய், தனது பிரச்சார பேருந்தில் இருந்து தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.
ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பலர் தொடர்ந்து மயக்கமடைந்தனர். அவர்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் கிடைக்காத நிலையில், விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரின் உடல்களும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 58-க்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளோரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மருத்துவக் கல்லூரி முன்பு குழுமியுள்ளனர். அவர்கள் கதறி அழுது துடித்ததால் அப்பகுதி முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.