16 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த இந்திய தம்பதியினரை நாடு கடத்துவதற்குரிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
12 வயதான அபிஜோத் சிங் என்ற இவர்களின் மகனுக்கு ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம்பெறுவதே கனவு. அந்த இலக்கை அடைவதற்காக எல்லா வழிகளிலும் போராடிவருகின்றார். பயிற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றார்.
எனினும், அவரின் பெற்றோர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டால் அவரின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அபிஜோத் சிங்குக்கு ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்க முடியும் என்றபோதிலும், பெற்றோரை பிரிவதால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகக்கூடும் என சுட்டிக்காட்டுகின்றனர்.
அபிஜோத்தின் பெற்றோரான அமன்தீப் மற்றும் ஸ்டீவன் ஆகியோர் 2009 இல் ஆஸ்திரேலியா வந்து, மெல்பேர்ன் மேற்கில் குடியேறினர். பிரிட்ஜிங் விசாவில் இருந்த அவர்கள், நிரந்த வதிவிடத்துக்காக காத்திருந்தனர்.
எனினும், அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படாது எனவும், நவம்பர் மாதத்துக்குள் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அபிஜோத் சிங் ஆஸ்திரேலிய பிரஜை என்பதால் அவர் இங்கு தங்குவதற்கு சட்டரீதியாக எவ்வித சிக்கலும் இல்லை.
' எம்மை பிரிந்து மகன் ஒருநாள்கூட தனியாக வாழ்ந்ததில்லை." என்று விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் வேலை செய்யும் அபிஜோத்தின் தாயார் அமன்தீப் தெரிவித்தார்.
' நாம் இருவரும் முழு நேரம் வேலை செய்கின்றோம். வரி செலுத்துகின்றோம். எவ்வித குற்றமும் இழைக்கவில்லை. நிரந்த குடியுரிமையைப் பெறுவதற்கு நீதிமன்றத்தைக்கூட நாடி இருந்தோம்." எனவும் அவர் கூறினார்.
பெற்றோர் எந்த விசாவில் இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு 10 வயதாகும்போது ஆஸ்திரேலிய குடியுரிமைக் கிடைத்துவிடும். அபிஜோத் சிங்குங்கும் இது கிடைத்தது. ஆனால் 12 வயதில் அவரின் பெற்றோரை பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெற்றோருடன் இந்தியா செல்ல விரும்பினால் ஆஸ்திரேலிய குடியுரிமையை துறக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு இந்திய தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர்.