ஆஸ்திரேலியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு பப்புவா நியூ கினியா நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவிடமிருந்து பப்புவா நியூ கினியா சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் நிறைவு கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸியும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வொப்பந்தத்துக்கு பப்புவா நியூ கினியாவில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அமைச்சரவையில் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்குரிய இணக்கப்பாட்டு ஆவணத்தில் இரு நாடுகளின் தலைவர்களும் கையொப்பமிட்டனர்.
பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. எனவே, மூன்றாவது நாட்டின் இறைமையில் தலையிடும் உரிமை எவருக்கும் கிடையாது என சீனாகூட அறிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு பப்புவா நியூ கினியாவின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட நகர்வுகள் இடம்பெறும்.
ஏதேனும் நாடொன்றின்மீது தாக்குதல் நடந்தால் இரு நாடுகளும் இணைந்து செயற்படுதல், சைபர் பாதுகாப்பு, படைகளில் ஆட்சேர்ப்பு உட்பட பல அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.