காசாவுக்கு படகுகள்மூலம் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச்சென்ற மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவத்தை ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
அத்துடன், ஆறு ஆஸ்திரேலியர்கள் உட்பட சிறைபிடிக்கப்பட்டுள்ள மனிதாபிமான பணியாளர்களை விடுவிப்பதற்கு ஆஸ்திரேலிய அரசு தலையிட வேண்டும் என்று கிறீன்ஸ் கட்சியின் துணை தலைவர் இன்று வலியுறுத்தினார்.
காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறிந்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் படகு பயணத்தில் இருந்தனர்.
சுமார் 42 படகுகள் இஸ்ரேலால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேர் ஆஸ்திரேலியர்கள் என்பது பற்றி அறிய இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சை, ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தொடர்பு கொண்டுள்ளது.
அங்குள்ள ஆஸ்திரேலியர்களுக்கு தூதரக உதவியை வழங்குவதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது.
“ சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சிகிச்சையை உறுதிசெய்ய, சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு ஆஸ்திரேலியா அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது.” என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
' காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து, தடையின்றி செல்வதற்கு இஸ்ரேலுக்கு இடமளிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்." எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.