இஸ்ரேல், லெபனான் எல்லையில் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளே விசேட கூட்டறிக்கை ஊடாக இதனை வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் சூழ்நிலையிலேயே இவ்வாறு போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜேர்மனி, ஜப்பான், சவூதி அரேபியா, ஐக்கிய அரசு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளும் மேற்படி கூட்டறிக்கைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
இராஜதந்திர ரீதியில் தீர்வை எட்டுவதற்கான முயற்சியாகவே போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
இஸ்ரேல் பிரதமர் ஐ.நா. பொதுச்சபையில் நாளை உரையாற்றவுள்ளார். இதன்போது இது குறித்து தனது நாட்டின் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.