ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கன்பராவில் கைச்சாத்திடப்பட்டது.
ஆஸ்திரேலியாவிடமிருந்து பப்புவா நியூ கினியா சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் நிறைவு கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸியும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இவ்வொப்பந்தத்துக்கு பப்புவா நியூ கினியாவில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அமைச்சரவையில் உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இதனையடுத்து ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்குரிய இணக்கப்பாட்டு ஆவணத்தில் இரு நாடுகளின் தலைவர்களும் கையொப்பமிட்டனர்.
இந்நிலையில் மேற்படி ஒப்பந்தத்துக்கு பப்புவா நியூ கினியா அமைச்சரவையின் ஒப்புதல் நேற்று முன்தினம் கிடைக்கப்பெற்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
'இந்த ஒப்பந்தம் "புவியியல், வரலாறு மற்றும் நமது பகிரப்பட்ட சுற்றுப்புறத்தின் நீடித்த யதார்த்தத்தின் அடிப்படையில வரையப்பட்டது." - என்று பப்புவா நியூ கினியா பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் நாடொன்றின்மீது தாக்குதல் நடந்தால் இரு நாடுகளும் இணைந்து செயற்படுதல், சைபர் பாதுகாப்பு, படைகளில் ஆட்சேர்ப்பு உட்பட பல அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சுமார் 10 ஆயிரம் பப்புவா நியூ கினியா பிரஜைகள், ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைகளில் பணியாற்ற ஒப்பந்தம் வழிவகுக்கவுள்ளது.