ஆஸ்திரேலிய அரசாங்கம் தமக்கு போதுமானளவு ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய மனித நேய செயற்பாட்டாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக படகுகளில் சென்ற நூற்றுக்கணக்கான ஆர்வலர்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. இவர்களில் ஏழு ஆஸ்திரேலியர்களும் உள்ளங்கி இருந்தனர்.
இவர்களில் ஒருவரான ஜூலியட் லாமண்ட் ( Juliet Lamont) என்பவரே மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கைது செய்யப்பட்ட ஆர்வலர்கள் உயர்பாதுகாப்பு வலயமொன்றில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் நேற்றிரவு அங்கிருந்து ஜோர்தானுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் ஜோர்தானில் இருந்து கருத்து வெளியிட்ட ஜூலியட் லாமண்ட், தன்னார்வலர்கள் விவகாரத்தில் ஆஸ்திரேலியா கையாண்ட அணுகுமுறை வெட்கக் கேடானது எனக் குறிப்பிட்டார்.
ஏனைய நாடுகள் தமது பிரஜைகளுக்கு உரிய ஒத்துழைப்புகளை வழங்கின. ஆனால் ஆஸ்திரேலியா அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆஸ்திரேலியர்களே கடைசியாக விடுவிக்கப்பட்டனர். ஏனெனில் அரசாங்கத்தின் தலையீடு உரிய வகையில் இருக்கவில்லை எனவும் ஆஸ்திரேலிய ஆர்வலர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நிராகரித்தார். கைதானவர்களை விடுவிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு கடுமையாக உழைத்தது எனவும் கூறினார்.
ஜோர்தான் தலைநகரிலுள்ள ஆஸ்திரேலியர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.