காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இரண்டு வருடமாக நீடிக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போது நிகழாத நிகழ்வாகும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,
" இஸ்ரேலும், ஹமாசும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள்.
இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள்." - எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலும், ஹமாசும் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்ததை ஆஸ்திரேலியா வரவேற்கிறது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம், பணயக்கைதிகளை திருப்பி அனுப்புதல் மற்றும் காசாவிற்கு தடையின்றி உதவி வழங்குதல் ஆகியவற்றுக்கான சர்வதேச அழைப்புகளில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஒரு பகுதியாக இருந்து வருகிறது எனவும் அறிக்கையொன்றின் ஊடாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
" திட்டத்தின் விதிமுறைகளை மதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி டிரம்பின் இராஜதந்திர முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் மற்றும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் எகிப்து, கத்தார் மற்றும் துருக்கியின் முக்கிய பங்கை ஒப்புக்கொள்கிறோம்.
காசாவின் எதிர்கால நிர்வாகத்தில் ஹமாசுக்கு எந்தப் பங்கையும் மறுப்பதற்கான திட்டத்தின் உறுதிப்பாட்டை ஆஸ்திரேலியா கடுமையாக ஆதரிக்கிறது.
காசாவில் மீட்சி, நீண்டகால அமைதியைப் பாதுகாத்தல் மற்றும் பாலஸ்தீன அரசைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு மிக நீண்ட பாதை உள்ளது." எனவும் மேற்படி அறிக்கை ஊடாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.