நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், விசாரணைக்காக சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தைசூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களுடன் நேபாள பொலிஸாரும் வந்திருந்தனர்.
கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான மூளையாளியாக இஷாரா செல்வந்தி கருதப்படுகின்றார்.
மேற்படி கொலை சம்பவத்துக்கு பிறகு இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பியோடுவதற்கு பாதாள குழு உறுப்பினர் பெக்கோ சமன் என்பவரே வெளிநாட்டில் இருந்தவாறு ஏற்பாடுகளை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்துகம பகுதிக்கு சென்ற செல்வந்தி தனது முடியை கட்டையாக வெட்டிக்கொண்டு, ஆள் அடையாளத்தையும் மாற்றியுள்ளார். அதன்பின்னரே யாழ். சென்று அங்கிருந்து படகுமூலம் இந்தியா சென்றுள்ளார். சுபுன் என்பவரே அவரை காரில் யாழுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
ஜே.கே. பாய் என்ற ஆள்கடத்தல் காரரே யாழில் இருந்து இந்தியா தப்பிச்செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்தியாவில் இருந்து ரயில் மூலம் நேபாளம் சென்றுள்ளனர். அங்கு தலைமறைவாகி இருந்த நிலையிலேயே செவ்வந்தி உள்ளிட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான ரொஹான் ஒலுகலவே இந்த ஒபரேஷனுக்காக நேபாளம் சென்றிருந்தார்.
பொலிசுக்குள் பாதாள குழுவுக்கு உதவக்குகூடிய உளவாளிகள் இருக்கக்கூடும் என்பதால் தனக்கு வைரஸ் காய்ச்சல் என்ற தகவலை பரப்பிவிட்டு, வீட்டில் இருந்து சிகிச்சை பெறுவதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் வெளிநாடு சென்ற பிறகும் உள்நாட்டில் அவரது தொலைபேசி இயங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொலிஸ் அதிகாரி ரொஹான் ஒலுகலவேவை கண்ட செவ்வந்தி,
" சேர், என்னை நீங்கள் ஒருநாள் கைது செய்வீர்கள் என்பது தெரியும். 7 மாதங்கள் சிறையில் இருப்பதுபோல்தான் இங்கு இருந்தேன். இங்கு இருப்பதைவிட எனது நாட்டிற்கு செல்வது சுகம் என நினைத்தேன். எனினும், பொலிஸார் கைது செய்வார்கள் என்ற அச்சத்தால் இங்கேயே இருந்துவிட்டேன்." எனக் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல பாதாள குழு உறுப்பினர் கம்பஹா பபா என்பவர், சேர் 50 லட்சம் ரூபா தருகின்றேன் என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சியுள்ளார். அதனை ஏற்க பொலிஸ் அதிகாரி மறுத்துவிட்டார். பிறகு தொகையை அவர் உயர்த்தியுள்ளர்ர. ஆனால் பொலிஸ் அதிகாரி, மன்னிப்பு என்பதற்கே இடமில்லை என திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் தங்கி இருந்தபோது தன்னை இந்திய பெண்போலவே செவ்வந்தி காட்டிக்கொண்டுள்ளார், அங்கிருந்தபோது அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.