ஆஸ்திரேலியா தமது நாட்டின் இறையாண்மையை கடுமையாக மீறியுள்ளது என்று சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
'ஜிஷா தீவுகள் வழியாக ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானம் சீன வான்வெளிக்கும் அத்துமீறி நுழைந்தது." எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், தென்சீனக் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானத்துக்கு அருகில் சீன விமானம் ஆபத்தான முறையில் தீப்பிழம்புகளை வெளியிட்டது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்தார்.
இச்சம்பவத்தால் ஆஸ்திரேலிய படையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், இந்த சூழ்ச்சி நடவடிக்கையானது படையினருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே சீனா மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
' ஆஸ்திரேலியா அதன் அத்துமீறல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்." எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.
தென்சீனக் கடல் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சீனா கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றது. அப்பகுதியில் சர்வதேச வான் பரப்பில் ஆஸ்திரேலியா கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. அந்த வகையிலேயே கண்காணிப்பு இடம்பெற்றது என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.