இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட குழுவினர் டில்லி செல்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது தமிழரசுக் கட்சிக்கு டில்லி அழைப்பு விடுக்கவுள்ளமை தொடர்பில் தூதுவர் சமிக்ஞைகளை வெளிப்படுத்தினார் என தெரியவருகின்றது.
இலங்கையிலுள்ள பிரதான கட்சிகளின் பிரமுகர்களை புதுடெல்லி அழைத்து பேச்சு நடத்திவருகின்றது.
எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் இந்தியா சென்றார். ஜே.வி.பியின் செயலாளர் டிசம்பரில் அங்கு செல்கின்றார். இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியையும் டில்லி அழைக்கவுள்ளது என தெரியவருகின்றது.
சுமந்திரன் மற்றும் சாணக்கியனுடனான சந்திப்பின்போது இந்திய – இலங்கை உறவுகள் மற்றும், இலங்கை அரசியலின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து பரந்துபட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என்று இந்திய தூதுரகத்தின் எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரமுகர்களையும் இந்திய தூதுவர் சந்திக்கவுள்ளார். சிலவேளை தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரமுகர்களை டில்லி கூட்டாக அழைப்பதற்குரிய சாத்தியமும் இருப்பதாக கூறப்படுகின்றது.