ஸ்பெயினின் கேனரி தீவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றி வந்த படகு விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்ததாகவும் பயணம் செய்த 48 பேரைக் காணவில்லை என்றும் தேசிய கடல்சார் மீட்பு சேவை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மாலி, மொரிட்டானியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரே இவ்வாறு படகில் பயணித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அட்லாண்டிக் தீவுக்கூட்டத்தில் உள்ள தீவுகளில் ஒன்றான எல் ஹியர்ரோவில் இருந்து நள்ளிரவுக்குப் பிறகு பெறப்பட்ட பேரிடர் அழைப்பிற்கு மீட்புப் பணியாளர்கள் பதிலளித்த பின்னர் 84 பேர் கப்பலில் இருந்தனர் மற்றும் 27 பேர் காப்பாற்றப்பட்டனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
அட்லாண்டிக் பெருங்கடலுக்கூடாக ஐரோப்பாவை அடைவதற்காக, நெரிசல் மிகுந்த மற்றும் பெரும்பாலும் பாழடைந்த படகுகளில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் சமீபத்திய ஆண்டுகளில் இறந்துள்ளனர்.
ஆகஸ்ட் 15 நிலவரப்படி, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 22,304 புலம்பெயர்ந்தோர் கேனரிகளை அடைந்துள்ளனர், இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 9,864 ஆக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 40,000 புலம்பெயர்ந்தோர் கேனரிகளுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014ஆம் ஆண்டு முதல் இந்தப் பாதையில் 4,857 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு கூறினாலும் குடியேறியவர்களுக்கு உதவும் ஸ்பானிய அரசு சாரா அமைப்பான காமினாண்டோ ஃபிரான்டெராஸ், ஐரோப்பாவை அடைய முயன்று 18,680 பேர் இறந்ததாகக் கூறியது.
சபா.தயாபரன்