விமான பயணத்தின்போது “ பவர் பேங்” (power banks) பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியாவின் பிரதான இரு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.
Virgin மற்றும் Qantas ஆகிய விமான நிறுவனங்களே இதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளன.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் “ பவர் பேங்” பயன்படுத்துவதற்குரிய கட்டுப்பாடு அமுலுக்கு வரும் என Virgin விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான பயணத்தின்போது பயணிகள் "பவர்பேங்" எடுத்து சென்றால் அதனை இலகுவில் அணுகக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானத்துக்குள் அதனை பயன்படுத்த முடியாது.
எவரேனும் பவர் பேங் எடுத்துவர விரும்பினால் அதற்கு விமான நிறுவனத்தின் அனுமதி அவசியம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், டிசம்பர் 15 ஆம் திகதி முதல் தமது நிறுவனமும் இந்த நடைமுறையை அமுல்படுத்தும் என Qantas தெரிவித்துள்ளது.
விமான பயணத்தின்போது லித்தியம் பேட்டரியில் இயங்கும் சாதனங்கள் பயன்படுத்துவதால் தீ விபத்து ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளது.
சர்வதேச விமான பயண நடைமுறைகளுடன் இது ஒத்து போகின்றது என ஆஸ்திரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.