ஆஸ்திரேலிய தொழிலதிபர் ரஞ்சித் தம்பிராஜா, வியட்நாமில் பொது பாதுகாப்பு அமைச்சால் குற்றச்சாட்டு எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
“ தம்பிராஜா தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து வியட்நாமில் உள்ள அவரது குடும்பத்தினரையோ அல்லது சட்டப் பிரதிநிதிகளையோ சந்திக்க முடியவில்லை.” என்று அவரது ஆஸ்திரேலிய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் நிறுவனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இரு மாதங்களாக அவர் ஹோ சி மின் நகர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
65 வயதான ரஞ்சித் தம்பிராஜா, நியூயார்க்கிலிருந்து கோலாலம்பூர் வரை கடன் வாங்குபவர்களை , நிதி உலகில் கடன் வழங்குபவர்களுடன் இணைக்கும் ஒரு வணிகத்தை உருவாக்க பல தசாப்தங்களாக முயற்சித்தார்.
இந்நிலையில் வியட்நாமில் சக்திவாய்ந்த மற்றும் அரசியல் ரீதியாக தொடர்புடைய பொது பாதுகாப்பு அமைச்சகம், அங்குள்ள நிறுவனங்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டி, தம்பிராஜாவை குற்றச்சாட்டு இல்லாமல் கடந்த ஒக்டோபர் மாதம் சிறையில் அடைத்தது.
வியட்நாமில் உள்ள நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் கடன்களை வாங்க முடியும் என தம்பிராஜா பொய்யான கூற்றுக்களைச் கூறினார் எனவும், அவரை "தற்காலிகக் காவலில்" வைத்திருப்பதாகவும் வியட்நாம் தரப்பு தெரிவித்துள்ளது
.
எனினும், மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், அவர் வியட்நாமில் பல தசாப்தங்களாக சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
தம்பிராஜா தொடர்பில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரிடம் வினவியபோது, அதன் செய்தித் தொடர்பாளர், "வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஆஸ்திரேலியருக்கு தூதரக உதவியை வழங்குவதாக" கூறினார்.