சுவிட்சர்லாந்திலுள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில், நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த தீ விபத்தில், 40 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும் அது சார்ந்த சொகுசு விடுதிகளுக்கு பெயர் போனது.
இங்கு உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நேற்று நள்ளிரவு மதுபான விருந்து, ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. அப்போது திடீரென சொகுசு விடுதியின் மதுபான பாரில் தீ பற்றியது. இந்த தீ சில நிமிடங்களில் விடுதி முழுதும் பரவியது. மக்கள் பலர் அலறியடித்து வெளியேறினர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பல மணிநேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்கு கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் நேற்று வரை 40 பேர் உயிரிழந்ததாக சுவிட்சர்லாந்து சுகாதார துறை தெரிவித்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ பற்றிய போது அடுத்தடுத்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால், முதலில் இது பயங்கரவாத தாக்குதல் என்ற அச்சம் ஏற்பட்டது.
பொலிஸ் விசாரணையில் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது உறுதியானது.
முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து என தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபான விடுதியில் விருந்தினர்களுக்கு மதுவை பரிமாறும் தட்டின் மீது ஸ்பார்க்ளர் எனப்படும் மத்தாப்புகளை வைத்து பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
அவை அங்கிருந்த திரைச்சீலை ஒன்றின் மீது பட்டு தீ பிடித்துள்ளது. அந்த தீ உடனடியாக விடுதி முழுதும் பரவியது.
விடுதிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக தடையை மீறி பட்டாசுகளை வைத்திருந்தனர். தீ பரவிய உடன் அவை வெடித்ததால் குண்டு வெடிப்பு போன்று சத்தம் கேட்டுள்ளது.
மீட்புப் பணியில் 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 40 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டன எனவும் பொலிஸார் கூறினார்.
அதேவேளை, காயமடைந்த 115 பேரில் ஒருவர் ஆஸ்திரேலியர் என தெரியவந்துள்ளது. அவருக்கு தேவையான தூதரக உதவி வழங்கப்பட்டுவருகின்றது.