கிரீன்லாந்தை கையகப்படுத்திக்கொள்ள அந்தத் தீவின் மீது படையெடுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.
அது அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களுக்கு முக்கியமானது.
அமைதியான வழியில் அந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்வது முதல் ராணுவத்தை அனுப்பி அந்தத் தீவைக் கைப்பற்றுவது வரை அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து டென்மார்க் அரசுடன் அமெரிக்கா பேச்சு நடத்தும். அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இவ்விவகாரம் தொடர்பில் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் நடவடிக்கை ஐரோப்பிய இறையாண்மைக்கு சவால் விடுவதாகக் குற்றஞ்சாட்டும் அவர்கள், இதை நேட்டோவின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளனர்.
டென்மார்க் நேட்டோ உறுப்பு நாடு என்பதால் அந்த ராணுவக் கூட்டமைப்பின் 5-ஆம் விதியை செயல்படுத்த வேண்டியிருக்கும்.
அந்த விதியின் கீழ், நேட்டோ உறுப்பு நாட்டுக்கு எதிராக எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும், அது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு அந்த நாட்டுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.
எனவே, கிரீன்லாந்து மீது படையெடுத்தால் அமெரிக்காவுக்கு எதிராகவே பிற நேட்டோ உறுப்பு நாடுகள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இது நேட்டோ நாடுகளுக்கு இடையிலான உறவை சிக்கலாக்கி, அமைப்பையே சீர்குலைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்தே கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்வது தொடர்பில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுவருகின்றார்.
இதற்கு, ‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என்று டென்மார்க் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.
கிரீன்லாந்து அரசும், ‘நாங்கள் சுதந்திரமான மக்கள்.
அமெரிக்காவுக்கு விற்கப்பட மாட்டோம்’ என்று உறுதியாகக் கூறியது. ஐரோப்பிய நாடுகளும் டிரம்ப்பின் இந்தக் கருத்தை மிகவும் ஆபத்தானது என்று நிராகரித்தன.
இந்தச் சூழலில், வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோவையும் அவரின் மனைவியையும் அமெரிக்க சிறப்புப் படையினர் சிறைப்பிடித்ததைத் தொடர்ந்து, கிரீன்லாந்து விவகாரத்திலும் இதுபோன்ற துணிகர நடவடிக்கையை டிரம்ப் மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்தது.
அந்த அச்சத்தை உறுதிப்படுத்துவதுபோல் டிரம்ப்பும், வெள்ளை மாளிகையும் தற்போது பேசியுள்ளது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.