தரம் 6 இற்குரிய கல் வி மறுசீரமைப்பு நடவடிக்கை 2027 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படுகின்றது. எனினும், தரம் ஒன்றிற்குரிய நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அமைச்சர் நளிந்த ஜயஸ்ஸ அறிவித்தார்.
“ நாட்டில் கல்வி மறுசீரமைப்பு நடைபெறும் என ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின்போது நாம் உறுதியளித்தோம். அதற்கு மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது.
ஐந்து கட்டங்களாக இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்தது. முதலாவதாக தரம் ஒன்று மற்றும் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை 2026 இல் ஆரம்பமானது.
எனினும், தரம் 6 ஆங்கில பாட திட்டத்தில் உள்ள விடயம் தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
சிலர் இதனை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் வழக்குகளில் இருந்து தப்பிக்கொள்வதற்கு பயன்படுத்துகின்றனர். சிலர் அதிகார ஆசையில் களத்துக்கு வந்துள்ளனர்.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சமூகத்தின் நம்பிக்கையின்மை ஏற்படுத்தப்படுகின்றது. நம்பிக்கையீனத்துடன் இப்பணியை செய்ய முடியாது என நாம் கருதுகின்றோம்.
எனவே தரம் 6 ஆங்கில பாட திட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சை தொடர்பில் சிஐடி விசாரணை நடத்தியது, கல்வி அமைச்சும் விசாரணை நடத்தியது. இரு விசாரணைகளின் அறிக்கைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளின் பிரகாரம் கால அவகாசம் வழங்குவதற்காக தரம் ஆறுக்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை 2027 இல் ஆரம்பமாகும்." - என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.