வடகொரியா மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான வலுவான கூட்டாண்மையானது எமது பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாகும் என்று நேட்டோவுக்கான ஆஸ்திரேலியாவின் இராணுவத் தூதுவர் தெரிவித்தார்.
ஏர் வைஸ் - மார்ஷல் டி டர்டன், பிரஸ்ஸல்ஸில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஆஸ்திரேலியாவின் இராணுவ பிரதிநிதியாக செயல்பட்டார்.
ஈராண்டுகள் சேவையாற்றிய பின்னர் அவர் கன்பரா திரும்புகின்றார்.
இவர் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையில் உள்ள மூத்த பெண் அதிகாரிகளில் ஒருவராவார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது,
“ உலகளாவிய மோதல்கள் ஒரு காலத்தில் புவியியல் ரீதியாக மிகவும் பிரிக்கப்பட்டிருந்தன அல்லது வரையறுக்கப்பட்டிருந்தன. எனினும், தற்போது மிகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆஸ்திரேலியா விழிப்புடன் இருக்க வேண்டும்.” – எனக் குறிப்பிட்டார்.
உக்ரைனுடனான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வட கொரிய துருப்புக்களை அனுப்பியமை இதற்கு சான்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ வட கொரிய துருப்புக்கள் போர் அனுபவத்தைப் பெறுவதையும், மேற்கத்திய நாடுகள் வைத்திருக்கும் மற்றும் பயன்படுத்தி வரும் ஆயுத கட்டமைப்பு தொடர்பில் அவர்கள் அனுபவம் பெறுவதையும் காணமுடிகின்றது.
வடகொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டாண்மை வலுப்படுத்தப்பட்டுவருகின்றது.
மேலும் இது எங்கள் பிராந்தியத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும். தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற பல விஷயங்களுக்கு வழிவகுக்கும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாமற்றும் டாஸ்மேனியாவின் அனைத்து பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவகணைகளை வடகொரியா வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.