ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய மையங்கள், ஆயுத சேமிப்பு பகுதிகள் மற்றும் ராக்கெட் ஏவும் தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்திவருகின்றது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உட்பட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு 200-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதல் நடத்தியது. எனினும், அவற்றில் பல ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து, அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியது.
ஈரானின் இந்த தாக்குதலையடுத்து லெபனானில் தாக்குதலை இஸ்ரேல் துரிதப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றமும் உக்கிரமடைந்துள்ளது.
இஸ்ரேலின் கமாண்டோ படைகள், துணை இராணுவ படையினர் மற்றும் கவச பிரிவுகள், விமானம் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை தொடர்ந்து தெற்கு லெபனானின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை நடத்திவருகின்றன.
இதனால் ஹிஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு வருகின்றன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இதுவரை வான்வெளி தாக்குதல்களில் 150 உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு உள்ளன. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய மையங்கள், ஆயுத சேமிப்பு பகுதிகள் மற்றும் ராக்கெட் ஏவும் தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு விட்டன என்று கூறப்படுகின்றது.
அதேவேளை, இஸ்ரேல்மீதான ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள ஆஸ்திரேலியா, தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க வேண்டும் எனக் கருதுகின்றீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பதை நாம் விருப்பவில்லை எனவும், அதனால் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.