லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என முன்னாள் பிரதமர் டோனி அபோட் வலியுறுத்தியுள்ளார்.
லிபரல் மற்றும் நேஷனல் கட்சிகளுக்கிடையிலான கூட்டணி பிளவுபட்டுள்ளது.
லிபரல் கட்சியில் தலைமைப்பதவி மாற்றம் இடம்பெறாமல் மீள் இணைவு என்பது சாத்தியமில்லை என நேஷனல் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் லிபரல் கட்சி தலைவர் சூசன் லேவுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் டோனி அபோட், தற்போதைய தலைவர் சுசன் லேவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு அங்கஸ் டெய்லர் Taylor அல்லது ஆண்ட்ரூ ஹேஸ்டி ஆகியோரில் ஒருவரை நியமிக்க பழமைவாதிகளைத் வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறத்தில் நேஷனல் கட்சியின் தலைவர் டேவிட் லிட்டில்ப்ரௌட் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அவரது கட்சிக்குள் கடும் சவாலை எதிர்கொண்டுவருகின்றார்.
இரு கட்சிகளும் பிரிந்து செயல்படுவது எதிர்க்கட்சியின் வலிமையைக் குறைக்கும் என்று அஞ்சும் சில உறுப்பினர்கள், மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை ரகசியமாக முன்னெடுத்து வருகின்றனர்.
லே மற்றும் லிட்டில்ப்ரௌட் ஆகிய இருவரின் அரசியல் எதிர்காலமும் வரவிருக்கும் கட்சி அறை கூட்டங்கள் மற்றும் வாக்கெடுப்புகளைப் பொறுத்தே அமையும் என்பது தெளிவாகிறது.
இக்கட்டான இந்த சூழல் ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியின் வருங்காலத் திசையையும் அதன் ஸ்திரத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.