லிபரல் கட்சியின் முன்னாள் செனட்டர் Cory Bernardi , ‘One Nation’ கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
கருத்துக் கணிப்புகளில் கட்சி முன்னேற்றம் காணும் நிலையில், இந்த இணைவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
வரும் மாதம் நடைபெறவுள்ள தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தலில், மேல் சபைக்கான One Nation கட்சியின் முதன்மை வேட்பாளராக கோரி பெர்னார்டியை நிறுத்த உள்ளதாக கட்சித் தலைவர் பவுலின் ஹான்சன் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு தசாப்த காலம் செனட்டராக செயல்பட்ட கோரி பெர்னார்டி, 2020ஆம் ஆண்டு வரை லிபரல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அதன் பின்னர் லிபரல் கட்சியிலிருந்து விலகி, ‘ஆஸ்திரேலியன் கன்சர்வேட்டிவ்ஸ்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். எனினும், அந்தக் கட்சி வாக்காளர்களிடையே பெரிதும் ஆதரவு பெறவில்லை.
அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகிய பின்னர், தெற்குஆஸ்திரேலியாவின் ஐர் தீபகற்பப் பகுதியில் சிப்பி வளர்ப்பு தொழிலும், உணவகத் தொழிலிலும் பெர்னார்டி ஈடுபட்டு வந்தார்.
கிராமப்புற வாழ்க்கை அனுபவமும், வணிக நிர்வாகத் திறனும் தமது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் One Nation கட்சியின் வளர்ச்சியை பாராட்டிய பெர்னார்டி,
“One Nation கட்சியின் பயணத்திற்கு என் ஆதரவை வழங்குகிறேன். நாட்டின் அரசியல் பாதையை மாற்ற மக்கள் தயாராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணைவு, வரவிருக்கும் தென் ஆஸ்திரேலிய தேர்தலில் ஒன் நேஷன் கட்சிக்கு கூடுதல் அரசியல் வலுவை அளிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.