ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசியலில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே உடன், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
லிபரல் கட்சி தலைமைப் பதவிக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சூசன் லே தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது எம்.பி. பதவியிலிருந்தும் விலகும் தீர்மானத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது நீண்டகால அரசியல் சேவையை பாராட்டும் வகையில் பிரதமர் அவரை தொடர்புகொண்டார்.
இந்த நிலையில், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மிகக் கடினமான நாளிலும் அவர் வெளிப்படுத்திய அமைதியும் கண்ணியமும் பாராட்டத்தக்கது.
தனது சமூகத்திற்கும், ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டிற்கும் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவை செய்ததற்காக அவர் பெருமைப்படலாம்,” என தெரிவித்துள்ளார்.
சூசன் லே, ஆஸ்திரேலிய அரசியலில் பல ஆண்டுகள் முக்கிய பங்கு வகித்ததுடன், பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார். அவரது அரசியல் ஓய்வு அறிவிப்பு, ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரத்தில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.