ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியக் குடும்பங்கள் சிரியாவிலிருந்து தாயகம் திரும்புவதற்கு வர எந்த உதவியும் வழங்கப்படமாட்டாது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
வடகிழக்கு சிரியாவில் உள்ள அல்-ரோஜ் முகாமிலிருந்து 11 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள் உட்பட மொத்தம் 34 ஆஸ்திரேலியர்கள் நேற்று வெளியேறி, டமாஸ்கஸ் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து அவர்களின் பயணம் சிரிய அதிகாரிகளுடன் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்று கூறி, அவர்கள் திரும்பச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பங்கள் மீண்டும் பயணம் மேற்கொள்வார்களா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.
அங்கிருந்து தப்பிக்க முயன்ற பெண்களும் குழந்தைகளும் சிரிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் சொந்த முயற்சியில் திரும்பினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு அரசு ரீதியான மீட்பு நடவடிக்கைகள் எதுவும் வழங்கப்படாது என்றும், நாட்டின் சட்டங்களை மீறியிருந்தால் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தீவிரவாதக் கொள்கையுடையவர்களை ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று எதிர்கட்சி உறுப்பினர்களும் வலுவான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
சில பெண்கள் தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினாலும், இவர்களின் வருகை குறித்த விவாதம் ஆஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.