ஆஸ்திரேலியா மற்றும் கனடாவுக்கிடையில் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளை வலுப்படுத்தும் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
கனடா பிரதமர் மார்க் கார்னி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதன் பின்னர் இரு நாடுகளின் பிரதமர்கள் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
ஈரான் மீதான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தற்போதைய நிலையில் போர்நிறுத்தம் செய்வது சாத்தியமற்றது என்றும், ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தல் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
உலகளாவிய மோதல்கள் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவும் கனடாவும் மற்ற நடுத்தர நாடுகளுடன் இணைந்து புதிய சர்வதேச விதிகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்று கார்னி தனது உரையில் குறிப்பிட்டார்.
அணுசக்தி பரவலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குதல் போன்ற இலக்குகள் எட்டப்பட்ட பின்னரே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முக்கியமான தாதுக்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.