மெல்பேர்ணிலுள்ள உள்துறை அமைச்சரின் அலுவலகத்துக்கு முன்பாக புகலிடக்கோரிக்கையாளர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரு வன்முறையாளர்களால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இரு அகதிகள் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த இரு பெண்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு ஏற்கனவே வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றவர், இதனால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆம்பியூலன்ஸ் வண்டிமூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தமக்கான வாழ்வுரிமையை வலியுறுத்தி புகலிடக்கோரிக்கையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்ட இடத்துக்கு வந்த இருவர், போராட்டக்காரர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவானது ஜனநாயக நாடு, எனவே, ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டியது பொலிஸாரின் கடப்பாடு எனவும், வன்முறையில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.