குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஆளில்லா எரிபொருள் நிலையங்களில் (Unmanned depots) இருந்து சுமார் 11 லட்சம் டாலர் மதிப்பிலான டீசலைத் திருடியதாக 48 வயது மதிக்கத்தக்க நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பார்கின்சன் (Parkinson), புந்தாம்பா (Bundamba) மற்றும் கராவத்தா (Karawatha) ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் டிசம்பர் 2024 முதல் டிசம்பர் 2025 வரையிலான 12 மாத கால இடைவெளியில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.
திருடப்பட்ட எரிபொருள் அட்டைகளைப் (Fuel cards) பயன்படுத்தி இந்தத் திருட்டு அரங்கேறியுள்ளதாகப் பொலிஸார்தெரிவிக்கின்றனர்.
மார்ச் மாதம் கிரீன்பேங்க் (Greenbank) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், திருடப்பட்ட பொருட்கள் மற்றும் கைவினைத் தயாரிப்பான ஒரு டேசர் துப்பாக்கி (Homemade taser) கைப்பற்றப்பட்டது.
அந்த நபர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டு மோசடி வழக்குகளும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்கான இரண்டு வழக்குகளும் அடங்கும்.
அந்த நபர் மார்ச் 25 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது காவலில் (Remanded in custody) வைக்கப்பட்டுள்ளார்.
அடுத்த விசாரணை மே 15 அன்று ரிச்லேண்ட்ஸ் (Richlands) நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.