ஆஸ்திரேலியா டெரிகல் (Terrigal) பகுதியைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் பயிற்சியாளரான மேகன் பவுலர் (Meaghan Bowler), அமெரிக்கா புளோரிடாவிலுள்ள அவரது வீட்டில் வைத்து கணவர் ஜெஸ்ஸி ஜோன்ஸால் (Jesse Jones) குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 39 வயதான ஜெஸ்ஸி ஜோன்ஸ் 911 அவசர அழைப்புக்குத் தொடர்பு கொண்டு, தனது மனைவியைக் குத்திவிட்டதாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, 911 அழைப்பில் இருந்தவாறே கதவைத் திறந்துள்ளார்.
அவர் காட்டிய இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், இரண்டாவது மாடி குளியலறையில் மேகன் பவுலர் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதைக்கண்டனர்.
மருத்துவ உதவியாளர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி அவருக்கு லேசான நாடித்துடிப்பைக் கொண்டு வந்தனர். எனினும், சரசோட்டா நினைவு மருத்துவமனையில் (Sarasota Memorial Hospital) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தனது மனைவியை பலமுறை குத்தியதாக ஜோன்ஸ் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், நீதிமன்றத்தில் அவர் தன்னைக் குற்றவாளி இல்லை (not guilty) என வாதிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை இன்று மணடீ கவுண்டி (Manatee County) நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்தபோது இவர்களது இரண்டு சிறு குழந்தைகளும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT), மேகனின் குடும்பத்தினருக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருகிறது. மேகனின் உடலை விரைவில் தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ள செய்தியில்:
"அவர் எங்கள் அனைவராலும் ஆழமாக நேசிக்கப்பட்டவர். எங்களது வாழ்வில் அவர் ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.