ஆஸ்திரேலியா, ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் காணாமல் போன 5 வயது சிறுமியை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், காணாமல் போன சிறுமி தனது சகோதரியின் மகள் என்பதை ஆஸ்திரேலிய செனட்டர் Jacinta Nampijinpa Price உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் 'ஓல்ட் டைமர்ஸ்' (Old Timers Camp) முகாமில் உள்ள வீட்டில் சிறுமி ஷரோன் உறங்க வைக்கப்பட்டார்.
அன்று இரவு 11.30 மணியளவில் ஜெபர்சன் லூயிஸ் (Jefferson Lewis) என்பவருடன் அந்தச் சிறுமி கைகோர்த்துச் சென்றதை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜெபர்சன் லூயிஸ் அச்சிறுமியைக் கடத்திச் சென்றிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
சிறுமி காணாமல் போனது குறித்து அவரது தாத்தா ராபின் (Robin) மிகுந்த வேதனையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"என்னால் எதையும் செய்ய முடியவில்லை, அழுவதைத் தவிர... அவள் மிகவும் அமைதியான, அன்பான சிறுமி. தயவுசெய்து எங்களது குழந்தையைத் திருப்பித் தந்துவிடுங்கள், அவள் மிகவும் சிறியவள்" என அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சிறுமி ஷரோனுக்குப் பேசுவதில் சிரமம் இருப்பதால், அவர் கை அசைவுகள் (Hand signals) மூலமே தொடர்புகொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியைத் தேடும் பணியின் போது, ஆற்றங்கரையில் சில உடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதில் கடத்தல்காரராகக் கருதப்படும் ஜெபர்சன் லூயிஸ் அணிந்திருந்த மஞ்சள் மற்றும் கருப்பு நிறச் சட்டை மற்றும் சிறுமியின் உள்ளாடைகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஜெபர்சன் லூயிஸ் வன்முறைச் சம்பவங்களுக்காகச் சிறை சென்று, சிறுமி காணாமல் போவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது குடும்பம் இந்தச் சம்பவத்தால் நிலைகுலைந்துள்ளதாகத் தெரிவித்த செனட்டர் ஜசிந்தா பிரைஸ், சிறுமி உயிருடன் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பொலிஸார், தன்னார்வலர்கள் மற்றும் பழங்குடியினத் தடம் காண்பவர்கள் (Aboriginal trackers) எனப் பெருமளவிலானோர் இணைந்து சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.