ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜப்பான் பிரதமர் இன்று கன்பராவை வந்தடைந்தார். வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் உள்ளிட்ட குழுவினர் அவரை வரவேற்றனர்.
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இரு நாடுகளும் தங்களுக்குத் தேவையான எரிபொருள் வளங்களைப் பகிர்ந்து கொள்வது இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஜப்பான் தனது நிலக்கரி மற்றும் எரிவாயுத் தேவைகளுக்கு ஆஸ்திரேலியாவை நம்பியிருக்கும் வேளையில், ஆஸ்திரேலியா தனது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தேவைகளுக்காக ஜப்பானை சார்ந்துள்ளது.
பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டு ஒப்பந்தம் ஒன்றிலும் இவ்விரு தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 ஆண்டுகால நட்புறவைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ள இப்பயணம், பிராந்திய அளவில் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும்.
ஜப்பானியப் பிரதமர் வியட்நாமிற்குச் சென்ற பிறகு ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.