இலங்கையில் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், ஆஸ்திரேலியா மற்றும் பரமட்டா (Parramatta) பகுதியில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து தானும் அஞ்சலி செலுத்துவதாக ஆஸ்திரேலிய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ சார்ல்டன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு
"ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி, இலங்கை போரின் போது தங்களின் உயிர்களை இழந்தவர்களைக் நினைவு கூரவும், நெஞ்சில் சுமந்து நிற்கும் ஆறாத துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தமிழ் மக்கள் ஒன்றுகூடுகின்றனர்.
ஆஸ்திரேலியாவிலேயே மிக அதிகமான தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியாக பரமட்டா தொகுதி விளங்குகிறது.
பல ஆண்டுகளாக இந்தத் தமிழ் சமூகத்துடன் இணைந்து தைப்பொங்கல் கொண்டாட்டங்கள், அன்சாக் (ANZAC) நினைவு தின நிகழ்வுகள் என எனது நாடாளுமன்ற மற்றும் தொகுதி அலுவலக மட்டங்களில் பங்காற்றியதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
இதேவேளை, தமிழ் சமூகத்தின் சொந்த நிதிப் பங்களிப்புடனும், Cumberland மாநகர சபையின் ஆதரவுடனும், ஆஸ்திரேலியாவின் முதலாவது 'தமிழ் நினைவுத் தூபி' (Tamil Memorial) இந்த வாரம் 'பெண்டில் ஹில்' (Pendel Hill) பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நினைவிடம், இந்தத் தலைமுறைக்கும் இனிவரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் ஒரு வரலாற்று நினைவுப் பகுதியாகவும், சிந்தனைத் தளமாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தத் துயர் தோய்ந்த நாளில், எனது இதயம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துடனேயே இருக்கிறது" எனவும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.