ஆஸ்திரேலியா, சிட்னி தெற்மேற்குப் பகுதியில் வீடொன்றுமீது பாதாளக்குழு நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
சிட்னியைச் சேர்ந்த பிரபல Rap இசைக் குழுவான OneFour இன் முன்னாள் உறுப்பினரான அலை அஹியோ Alai Ahio , Canley Heights பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களுடன் இருந்தவேளையிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்கு அவசர அழைப்புகள் வந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, இரவு 8.30 மணியளவில் அஹியோ மற்றும் 32 வயதுடைய மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் லிவர்பூல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அஹியோவிற்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு நபர் கழுத்தில் ஏற்பட்ட காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இரவு 8.40 மணியளவில் 23 மற்றும் 22 வயதுடைய மேலும் இரு இளைஞர்கள் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் 23 வயது இளைஞருக்குக் கழுத்திலும், 22 வயது இளைஞருக்குத் தோள்பட்டையிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன.
பின்னர், இரவு 9.50 மணியளவில் 19 வயதுடைய 5ஆவது இளைஞர் கையில் ஏற்பட்ட காயங்களுடன் லிவர்பூல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கேன்லி வேல் பகுதியில் உள்ள மேற்படி வீட்டிற்குள் இருவர் நுழைந்ததாகவும், அதன் பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய அந்த இரு நபர்களும் வெள்ளை நிற எஸ்.யூ.வி ரக காரில் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் ஒருவருக்குக் கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்றும், இவர்களுக்கு பாதாள உலகக் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
“ இது மிகவும் துணிச்சலான மற்றும் வன்முறையான தாக்குதல். இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று நாங்கள் நம்புகிறோம்
.
அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இதுபோன்ற பழிவாங்கும் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.