ஆஸ்திரேலியாவில் செயல்படும் 'வைட் ஆஸ்திரேலியா' என்ற நவ-நாஜி அமைப்பு சட்டவிரோத வெறுப்புக் குழுவாகப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில். அத்தடையை நீக்ககோரி கோரி தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும், இது குறித்த முடிவை உயர் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் எடுக்கவுள்ளது.
முன்னர் 'நேஷனல் சோசலிஸ்ட் நெட்வொர்க்” என்று அழைக்கப்பட்ட இந்த அமைப்பு, அரசாங்கத்தின் வெறுப்புப் பேச்சு சட்டத்தை ரத்து செய்யக் கோருவதோடு, உள்துறை அமைச்சர் தங்களை சட்டவிரோதமான அமைப்பாக அறிவிப்பதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவையும் கோரி வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக் கூட்டத்திற்கு முன்னதாக, வழக்கை தாக்கல் செய்த முன்னணி நியோ-நாஜியான தாமஸ் செவெல் டெலிகிராமில் வெளியிட்ட பதிவில்,
“ இந்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை, அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி என்னை கைது செய்வதையோ அல்லது சிறையில் அடைப்பதையோ தடுப்பதே இந்தத் தடை உத்தரவின் நோக்கமாகும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி ஜேன் ஜாகோட் , இந்த மனு அவசரமானது அல்ல என்றும், வரும் வாரங்களில் நடைபெறவுள்ள விசாரணையில் இதைக் கையாளலாம் என்றும் கூறினார்.
இதன் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 2 முதல் ஜூன் 5 வரை நடைபெறும், அப்போது இந்த அமைப்பை தடை செய்வதைத் தடுப்பதற்கான மனு மீது முடிவு எடுக்கப்படலாம்.
வெறுப்புப் பேச்சு சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடி குறித்து விவாதிப்பதற்கான இரண்டு நாள் இறுதி விசாரணை செப்டம்பர் மாத தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
'வைட் ஆஸ்திரேலியா' அமைப்பு, அடுத்த கூட்டாட்சித் தேர்தலில் போட்டியிடுவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு அரசியல் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வருகிறது.
2026 விக்டோரியன் மாநிலத் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான காலக்கெடுவுக்கு முன்னதாக இந்த விஷயத்தைக் கையாள விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, வைட் ஆஸ்திரேலியா அமைப்பின் வழக்கறிஞர் பீட்டர் கிங், அது அவ்வளவு முக்கியமானதல்ல என்று கூறினார்.