ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) நோய்த்தொற்று பரவியிருப்பது தீவிரமாக பரவிவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
நோய் பரவலைத் தடுக்கவும், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதில் அரசாங்கம் ஏன் தாமத போக்கை கடைபிடித்ததது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மத்திய ஆஸ்திரேலிய பூர்வக்குடி காங்கிரஸ் அமைப்பின் (Central Australian Aboriginal Congress) முதன்மை மருத்துவ அதிகாரியான Dr. John Boffa ,
" ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) பகுதியில் இந்தத் தீவிர பாக்டீரியா தொற்று பரவுவது கடந்த மார்ச் மாத இறுதியில் தான் முதன் முதலில் அறியப்பட்டது. நோய் பரவத் தொடங்கி பல மாதங்களுக்குப் பிறகே இது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.
நாங்கள் இதைப் பற்றி அறிவதற்கு முன்பே, இந்த நோய் நீண்ட நாட்களாக சமூகத்தில் பரவிக்கொண்டிருந்தது" என்று கூறுகிறார்.
அந்த சமயத்தில், Northern Territory சுகாதாரத் துறைக்கு 37 தோல் சார்ந்த தொண்டை அடைப்பான் (cutaneous diphtheria) பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது.
இவை 2025 மே மாதத்திலிருந்தே மெதுவாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
மேலும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தீவிர சுவாசப் பாதை தொண்டை அடைப்பான் (respiratory diphtheria) நோயால் பாதிக்கப்பட்ட 4 பாதிப்புகள் மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்டன.
பூர்வக்குடி அமைப்புகள் உடனடியாகப் களமிறங்கிய போதும், பூர்வக்குடி மக்களின் குடியிருப்புகளுக்குச் சென்று தடுப்பூசி போட முயன்ற போது தான், இந்நோய் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரியவந்தது.
டிப்தீரியா நோயின் தீவிரம், தடுப்பூசி போடும் முறைகள் மற்றும் பூஸ்டர் (booster) தடுப்பூசி எப்போது செலுத்த வேண்டும் என்பது போன்ற தகவல்கள் மக்களுக்குத் தெரியவில்லை.
குறிப்பாக, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள சூழலில் உள்ள பூர்வக்குடி மக்கள் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல் உள்ளது.
தற்போது இந்தத் தொற்று பாதிப்பு 230-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதில் மேற்கு ஆஸ்திரேலியாவில் (WA) 85 பாதிப்புகளும் , தெற்கு ஆஸ்திரேலியாவின் ஏபிவொய் (APY Lands) பகுதியில் 7 பாதிப்புகளும், குயின்ஸ்லாந்திலும் சில பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சுவாசப் பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியின முதியவர்கள் ஆவர். தொலைதூர பழங்குடியின கிராமங்களில் நிலவும் நெரிசலான வீட்டு வசதிகள் மற்றும் மோசமான வாழ்வாதார சூழல்களே இந்த நோய் வேகமாகப் பரவுவதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
Northern Territory இல் ஜனவரி மாதத்திற்குப் பிறகு 50 நோயாளிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1999 முதல் ஆண்டுக்கு 6 அல்லது அதற்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகி வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
பூர்வக்குடி மருத்துவச் சேவை மையங்கள் தங்களின் சிறிய மருத்துவக் குழுக்களைக் கொண்டு, அந்தந்தப் பகுதி மொழிகளிலேயே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவிட் தொற்றுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கான நிதி தட்டுப்பாடு மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாதது இவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
"இது பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு நோயாக இருந்ததால், இதன் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்று மக்களுக்குத் தெரியவில்லை" என்று களப்பணியாளர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கத்தின் காலதாமதமான நடவடிக்கை இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் கடந்த ஏப்ரல் மாதமே கூடுதல் நிதி உதவி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், மே 16 வரை எந்தப் பதிலும் வராததால், வடக்கு மாகாணத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தில் முதல் முறையாக டிப்தீரியா தொடர்பான உயிரிழப்பு (ஒரு பழங்குடியின பெரியவர்) நேரிட்டதாக ஊடகங்களில் கவலை தெரிவிக்கப்பட்டது.