IS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய மற்றுமொரு குழுவினர் மெல்போர்ன் விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளனர்.
சிரியாவின் வடபகுதியில் உள்ள அல்-ரோஜ் (Al-Roj) முகாமில் இருந்து கடந்த வாரம் புறப்பட்ட இக்குழுவினர், கத்தாரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை இன்று வந்தடைந்தனர்.
'ஐஎஸ் மணப்பெண்கள்' என்று அழைக்கப்படும் இரு பெண்களும், அண்மையில் 18 வயதை எட்டிய ஓர் இளைஞனும், அவர்களின் ஏழு குழந்தைகளுமே இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளை, சிரிய முகாமில் இருந்து வெளியேறிய இரண்டாவது குழுவினர் இன்று இரவு சிட்னி விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினரின் வருகை கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்,
“ ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மீது ஏதேனும் ஒரு வகையில் அனுதாபம் காட்டும் எவர் மீதும் எனக்கு வெறுப்பு மட்டுமே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியாவில் இருந்து திரும்பும் இந்த ஐஎஸ் தொடர்புடைய பெண்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எந்தவிதமான நிதி உதவியும் வழங்கவில்லை என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்புத் தரப்புகளின் ஆலோசனைகளின் பிரகாரம், அவர்கள் "சட்டத்தின் முழு பலத்தையும் எதிர்கொள்ள நேரிடும்" என்றும் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோன்று, நான்கு பெண்களும் குழந்தைகளும் இம்மாத ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா திரும்பியிருந்தனர்.
அவர்களுள் மூன்று பெண்கள் மெல்போர்ன் மற்றும் சிட்னி விமான நிலையங்களை வந்தடைந்ததும் ஆஸ்திரேலியக் கூட்டாட்சிக் காவல்துறையினரால் (AFP) கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.