ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் எதிர்க்கட்சியை 'லிபரல் ஒன் நேஷனல் கட்சி' (Liberal One National party) என்று ஒரு புதிய வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சி தலைவர் அங்கஸ் டெய்லர் , பிரதமரிடம், "தனிநபர் ஜிடிபி (GDP per capita) வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு குடியேற்றத்தை (Migration) அதிகரிப்பது மட்டும்தான் அரசாங்கத்தின் ஒரே உத்தியா?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் முன், நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த சாலமன் தீவுகளின் பிரதமரை நோக்கி நகைச்சுவையாகக் குறிப்பிட்ட பிரதமர் அல்பானிஸ்,
"எங்கள் நாடாளுமன்றம் சில நேரங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று உங்களிடம் கூறியிருந்தேன். தொடக்கம் நன்றாக இருந்தது, ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கிவிட்டது" என்றார்.
அதனைத் தொடர்ந்து பொருளாதாரக் கேள்விக்குப் பதிலளித்த அல்பானிஸ், " மத்திய கிழக்கில் போர் வெடித்துள்ள போதிலும், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் உண்மையில் வளர்ச்சியை நோக்கியேச் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
"உலகில் உள்ள மற்ற நாடுகளை விடவும் நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கவே அதிகம் விரும்புவீர்கள். குறிப்பாக, நமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் நிலைமையைப் பார்த்தால் இது புரியும். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வாரத்திற்கு ஒருமுறை கட்டாய பொது விடுமுறை அறிவிக்கப்படும் நாடுகள் கூட நமது பிராந்தியத்தில் உள்ளன" என்று குறிப்பிட்டார்.
இதன்போது, தாங்கள் குடியேற்றம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பியதாகக் கூறி, பிரதமரின் பதிலுக்கு எதிர்க்கட்சியினர் ஒழுங்குப் பிரச்சினை (Point of order) எழுப்ப முயன்றனர்.
எனினும், அதனைப் பொருட்படுத்தாமல் தனது பதிலைத் தொடர்ந்த அல்பானிஸ், எதிர்க்கட்சியை வம்புக்கு இழுக்கும் வகையில் ஒரு புதிய விமர்சனத்தை முன்வைத்தார்.
"அங்கே அமர்ந்திருக்கும் 'லிபரல் ஒன் நேஷனல் கட்சி'யின் தலைவரை நாம் பார்க்கிறோம். நாட்டின் குடியேற்ற வீதம் 45 விழுக்காடு (45%) குறைந்துள்ளது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அப்படித் தெரிந்திருந்தும், உலகளாவிய போரினால் ஏற்படும் சர்வதேசப் பொருளாதாரத் தாக்கங்களில் இருந்து ஆஸ்திரேலியா மட்டும் ஏதோ தனித்து தப்பித்துவிட்டது போல இங்கு வந்து நாடகமாடுகிறார்கள்" என்று அல்பானிஸ் சாடினார்.
எதிர்க்கட்சிக் கூட்டணியைக் குறிவைத்து பிரதமர் அல்பானிஸ் பயன்படுத்திய இந்த 'லிபரல் ஒன் நேஷனல் கட்சி' என்ற புதிய அரசியல் விமர்சனம், வரும் நாட்களில் ஆஸ்திரேலிய அரசியலில் மேலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.