ஆஸ்திரேலியாவின் ஒன் நேஷன் (One Nation) கட்சி, வெளிநாட்டினர் வீடு வாங்குவது தொடர்பான தனது கொள்கையில் நிலவிய குழப்பங்களைச் சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அக்கட்சியின் உறுப்பினர்கள் சில ஊடக நேர்காணல்களில், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் (Permanent Residents) தங்கள் வீடுகளை விற்க வேண்டும் என்று கூறியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் பாலின் ஹான்சன், இந்த விதிமுறைகள் வெளிநாடுகளில் வசிக்கும் அந்நியர்களுக்கும் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தினார்.
ஆஸ்திரேலியக் குடிமக்களுக்கே வீடுகள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே இக்கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது.
'ஸ்கை நியூஸ்' நேர்காணலின் போது ஒன் நேஷன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பார்னபி ஜாய்ஸ் (Barnaby Joyce) செய்த பகிரங்கமான குளறுபடியைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை இரவு 'தி போல்ட் ரிப்போர்ட்' (The Bolt Report) நிகழ்ச்சியில் தோன்றிய ஜாய்ஸிடம், ஒன் நேஷன் கட்சியின் கீழ், நிரந்தர குடியிருப்பாளர்கள் தங்களது சொத்துக்களை விற்க வேண்டுமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "கொள்கையின்படி விற்க வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை. மக்கள் ஆஸ்திரேலிய குடிமகனாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்... அதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும், இல்லையா? ஆஸ்திரேலிய குடிமகனாக மாறுங்கள்" என்று பதிலளித்தார்.
நேர்காணலுக்குப் பிறகு, ஜாய்ஸ் பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், பின்னர் தனது பதிலைத் மீண்டும் பதிவு செய்ய (re-record) அனுமதி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் மீண்டும் நேரலையில் தோன்றி, தனது முந்தைய கருத்தைத் திரும்பப் பெற்று, கட்சியின் கொள்கையை தெளிவுபடுத்தினார்.
"இந்தக் கொள்கை இன்னும் உருவாக்கத்தில் உள்ளது. ஆனால், ஒன் நேஷன் கட்சியுடன் மேலும் நடத்திய விவாதங்களின்படி, நிரந்தர குடியிருப்பாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நாங்கள் வெளியேற்றப் போவதில்லை" என்று கூறினார்.
மேலும், இதன் "நோக்கம் மிகவும் தெளிவானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"மக்கள் ஆஸ்திரேலிய குடியுரிமையை நோக்கி நகர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அது நிரந்தர குடியிருப்பாளர்களின் வீடுகளைப் பறிக்கும் செலவில் நடக்கக்கூடாது."
வெள்ளிக்கிழமை காலை, '2GB Radio' தொகுப்பாளர் மார்க் லெவி, செனட்டர் சீன் பெல்லிடம் (Sean Bell), வெளிநாட்டு உரிமையாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் வீடுகளை விற்கத் தவறினால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பெல், “அது ஒரு சிறந்த கேள்வி, ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள் ஆஸ்திரேலிய குடிமக்களுக்கே செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் நியாயமானது” என்று பதிலளித்தார்.
ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகத்தின் (ATO) தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள மொத்த 10.9 மில்லியன் வீடுகளில் 40,000 குடியிருப்பு சொத்துக்கள் மட்டுமே வெளிநாட்டினருக்கு சொந்தமானவை — இது மொத்த வீடுகளில் வெறும் 0.03 சதவீதமாகும்.