ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்களுக்கு இடையிலான வருடாந்த இருதரப்பு பேச்சு ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள நூசா (Noosa) பகுதியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இரு நாடுகளும் தற்போது எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான சவால் "ஸ்திரமற்ற மற்றும் மாறிவரும் உலகச் சூழலே" என்பதை இரு தலைவர்களும் இதன்போது,
ஒப்புக்கொண்டனர்.
மேற்படி சந்திப்புக்கு பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese ,
"நாம் தற்போது மிகவும் கொந்தளிப்பான ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகளாவிய வர்த்தகம் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளை வழிநடத்திய பழைய சில நிச்சயத்தன்மைகள் தற்போது மறைந்துவிட்டன.
இத்தகைய வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான ஆழமான நட்பு பெரிதும் உதவும்" என்று குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இரு தலைவர்களும் சீனாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் விரிவடைந்து வரும் ஆதிக்கம் குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து கவலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்து வைத்துள்ள வர்த்தகப் போரினால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலிலேயே இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை பிரதமர் அல்பானிஸ் இதன்போது வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் புதிய உடன்படிக்கைகள் எதுவும் அறிவிக்கப்படாத போதிலும், எதிர்காலப் பாதை குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சாதகமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.