ஈரான்மீது இன்று அதிகாலை இஸ்ரேல் விமானப் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று வடக்கு இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஈரான் நிலப்பரப்பின் மீது இஸ்ரேல் நடத்தும் முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
ஈரானின் அரசு ஊடகங்களின்படி, தலைநகர் தெஹ்ரான், கரஜ், இஸ்பஹான், தப்ரிஸ் மற்றும் கெர்மான்ஷா ஆகிய முக்கிய நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தை சுற்றியுள்ள வான்வெளியை மூடிய ஈரான் விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
நேற்று காலை லெபனானின் பெய்ரூட் நகரின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை நேற்று இரவு இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானத் தளத்தைக் குறிவைத்து சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.
இதனை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே, இன்று அதிகாலை ஈரானுக்குள் இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, "ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம், அமைதி காக்கவும்" என்று வலியுறுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் பேச்சினை மீறி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.