விக்டோரியா மாநில பிரீமியர் Jacinta Allan னை இழிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு நடமாடும் விளம்பரப் பலகையை ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
இந்த விளம்பரங்களில் முதல்வரை மந்திரவாதி போல் சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவுப் படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஆகியோர் இந்தச் செயலை பாலினப் பாகுபாடு கொண்டதாகவும் பொது வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் கருதுகின்றனர்.
அரசியல் தலைவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து பிரதமர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.
கருத்து மோதல்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர, இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய ஆபாசமான மற்றும் வெறுக்கத்தக்க விளம்பரங்கள் பெண்களின் அரசியல் வருகையைத் தடுக்கும் என அஞ்சப்படுகிறது.
விக்டோரியா மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜெஸ் வில்சனும் இந்த விளம்பரங்கள் "பாலின பாகுபாடு மற்றும் பொருத்தமற்றவை" என்று கூறியுள்ளார். தங்களது கூட்டணிக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். லிபரல் கட்சியின் துணைத் தலைவர் ஜேன் ஹியூமும் இந்த விளம்பரத்தைக் கண்டித்துள்ளார்.
இருப்பினும், ஒன் நேஷன் (One Nation) கட்சியின் தலைவரான பாலின் ஹான்சன் இதற்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். ஜெசிந்தா ஆலனை நோக்கி, "இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் (Suck it up sweetheart). இத்தனை வருடங்களாக எனக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே" என்று அவர் விமர்சித்துள்ளார்.