வியட்நாமில் கொல்லப்பட்ட குற்ற கும்பல் தலைவரின் இறுதிச்சடங்கு நடைபெறவிருந்த, சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அரங்கு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சனிக்கிழமை மதியம் Punchbowl பகுதியில் உள்ள அரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து காவல்துறை அங்கு விரைந்தது.
கார் ஒன்றின் உள்ளே இருந்தபடி ஆயுததாரிகள் அந்த அரங்கை நோக்கி சுடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கொல்லப்பட்ட Lorenzo Lemalu என்பவரின் இறுதிச்சடங்கு இந்த அரங்கில் நடப்பதாக முதலில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் திட்டங்கள் மாற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமையன்று Lakemba Mosque அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த மே 21 அன்று வியட்நாமின் ஹோ சி மின் நகரில் லெமாலு சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடந்த சனிக்கிழமையன்று, பஞ்ச்போல் பகுதியின் அருகிலுள்ள கில்லியன் பிளேஸ் (Gillian Place) என்ற இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறை, கைவிடப்பட்ட கார் ஒன்று தீப்பற்றி எரிவதைக் கண்டறிந்தது.
காவல்துறையின் தீவிர விசாரணைக்குப் பிறகு, திங்கள்கிழமை மதியம் பிக்னிக் பாயிண்ட் (Picnic Point) பகுதியில் வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டு குடியிருப்பு நோக்கி துப்பாக்கியால் சுட்டது, தீ/வெடிபொருட்களைக் கொண்டு சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் குற்றச் செயல்களுக்குப் பங்களிக்கும் குழுவில் பங்கேற்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிணை மறுக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமையன்று சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
மேலும், திங்கள்கிழமையன்று ஏர்ட்ஸ் (Airds) மற்றும் பஸ்பி (Busby) ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது 23 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து தோட்டாக்களை காவல்துறை பறிமுதல் செய்தது. பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் குற்றவியல் குழுவில் பங்கேற்றது போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிணை மறுக்கப்பட்டு செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
கொல்லப்பட்ட லெமாலு, "கோகனட் கார்டெல்" (Coconut Cartel) எனப்படும் குற்ற கும்பலின் தலைவராக இருந்தார் என காவல்துறை நம்புகிறது.
இந்த கும்பல், அலமெடின் (Alameddine) குற்றவியல் குடும்பத்துடன் பழிக்குப்பழி வாங்கும் துப்பாக்கிச் சூடு சண்டைகளில் ஈடுபட்டு வந்தது. பசிபிக் தீவு மக்களை (Pasifika people) இழிவுபடுத்தும் வரலாற்று ரீதியான ஒரு சொல்லே இந்த கும்பலின் பெயராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
லெமாலுவின் உடல் கடந்த வாரம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையன்று பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில், லகெம்பா மசூதியில் அவரது இறுதிச்சடங்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் நடைபெற்றது.
பஞ்ச்போல் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.