ஆஸ்திரேலியா முழுவதும் மக்களின் சேமிப்புப் பணம் குறைந்து வரும் நிலையில், எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்று பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
Finder நிறுவனம் நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், பங்கேற்றவர்களில் 48 சதவீதம் பேர் 2026-ல் பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படுவதற்கு "வாய்ப்பு" உள்ளதாகக் கருதுகின்றனர்.
மேலும் 16 சதவீதம் பேர் அது உறுதி என்று தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், ஒட்டுமொத்தமாக 64 சதவீத ஆஸ்திரேலியர்கள் (அதாவது சுமார் 13.7 மில்லியன் மக்கள்) அடுத்த ஆறு மாதங்களுக்குள் நாடு ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் எனத் தயாராகி வருகின்றனர்.
இதேவேளை, பைண்டர் நிறுவனத்தின் மற்றொரு தனிப்பட்ட ஆய்வு, 42 சதவீத ஆஸ்திரேலியர்களின் சேமிப்புக் கணக்கில் 1000 டாலருக்கும் குறைவான பணமே உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆஸ்திரேலிய மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று பைண்டர் நிறுவனத்தின் தனிநபர் நிதி நிபுணர் Sarah Megginson) தெரிவித்துள்ளார்.
"நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியை உணர்கின்றன. நிலைமை சீராவதற்கு முன்பு இன்னும் மோசமடையக்கூடும் என்று பலர் கவலைப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
மேலும், "பொருளாதார மந்தநிலை ஏற்படுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இத்தனை அதிகமான மக்கள் அதை எதிர்பார்ப்பது அவர்கள் மத்தியில் உள்ள தீவிரமான பதற்றத்தைக் காட்டுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார வீழ்ச்சி குறித்த இந்த பயம், ஏற்கனவே நுகர்வோரின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும், குடும்பங்கள் தங்களது செலவுகளைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் மெக்கின்சன் தெரிவித்தார்.
"குடும்பங்கள் தேவையில்லாமல் பணம் செலவழிப்பதிலும், புதிய கடன்களை வாங்குவதிலும் இப்போது அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன," என்றார்.
இந்த ஆய்வின்படி, 15 சதவீத ஆஸ்திரேலியர்கள் பொருளாதார மந்தநிலை ஏற்படுமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றும், கிட்டத்தட்ட 18 சதவீதம் பேர் மந்தநிலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் நம்புகின்றனர்.
வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே பொருளாதார மந்தநிலை "நிச்சயமாக ஏற்படாது" என்று கருதுகின்றனர்.
இதுபோன்ற காலங்களில், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, அவசர காலச் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம் என்று மெக்கின்சன் அறிவுறுத்தியுள்ளார்.
"பொருளாதார நிச்சயமற்ற தன்மை பயமுறுத்துவதாக இருந்தாலும், இன்று நீங்கள் எடுக்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அடுத்து என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்கும்," என்று அவர் மேலும் கூறினார்.