ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 3 ஆவது பாதுகாப்பு கொள்கை ஆலோசனை கூட்டம் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது.
இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இரு நாடுகளும் தங்களது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நலன்களின் அடிப்படையில், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில் நெருக்கமாகச் செயல்பட இக்கூட்டத்தில் உறுதியேற்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை அமைச்சர்கள் திட்டவட்டமாகக் கண்டித்ததுடன், ரஷ்யா தனது படைகளை முழுமையாகவும் நிபந்தனையின்றியும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினர்.
உக்ரைனுக்கு தங்களது ஆதரவு தொடரும் என்பதை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின.
ரஷ்யாவிற்கு இராணுவ ஆதரவு வழங்குவதை பிற நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும், ரஷ்யா மீது செல்வாக்கு செலுத்தும் நாடுகள், குறிப்பாக சீனா, அமைதியை நிலைநாட்ட நேர்மறையான பங்கை ஆற்ற வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் நாடுகளின் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மனிதாபிமான பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர்கள், அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களை மதித்து பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் நடத்தி வரும் ஆபத்தான தாக்குதல்களையும், வர்த்தகக் கப்பல்களுக்கான அச்சுறுத்தல்களையும் அவர்கள் கண்டித்தனர்.
சர்வதேச சட்டத்தின்படி, இந்த நீர் வழியில் கட்டணமற்ற, பாதுகாப்பான போக்குவரத்தை ஈரான் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, தைவான் நீரிணைப் பகுதியில் அமைதி மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ராணுவ வீரர்களின் நடமாட்டம் மற்றும் தளவாடப் பரிமாற்றத்தை எளிதாக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், சைபர் அச்சுறுத்தல்கள், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயல்பட இரு நாடுகளும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.