ஆஸ்திரேலியா, பெர்த்திலுள்ள மருத்துவ நிலையமொன்றில் அக்குபஞ்சர் சிகிச்சையின்போது பெண் நோயாளி ஒருவரிடம் பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்துகொண்ட இலங்கை வம்சாவளி வைத்தியரொருவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த 49 வயதான வினோ காரியகரவண என்பவரே, பெர்த் நீதவான் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதுகுவலியால் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய சர்வதேச மாணவி ஒருவர் 2025 ஜூலை மாதம், கார்லைல் மருத்துவ மையத்திற்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
அவருக்கு தசைப்பிடிப்பு இருப்பதாகக் கூறி, அக்குபஞ்சர் சிகிச்சைக்கு மறுநாள் வருமாறு வைத்தியர் காரியகரவண அழைத்துள்ளார்.
இதற்கமைய அங்கு வந்த மாணவிக்கு சுமார் 90 நிமிடங்கள் நீடித்த சிகிச்சையின்போது, நோயாளி மருத்துவமனை உடை அணிந்திருந்த நிலையில், அவரிடம் தவறான முறையில் குறித்த வைத்தியர் நடந்துகொண்டுள்ளார்.
அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு மசாஜ் செய்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் பாலியல் வரலாறு குறித்தும் தேவையற்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சிகிச்சை முடிந்தவுடன், இந்த வைத்தியர்,
“இந்தச் சிகிச்சை மிகவும் தொழில்முறை ரீதியாகவும், திருப்திகரமாகவும் அமைந்தது" என்று ஒரு போலி பின்னூட்டப் படிவத்தை தயாரித்து, அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரi ண இடம்பெற்றது.
நீதிமன்ற விசாரணையின் போது, மருத்துவரின் சட்டத்தரணி, “இது தற்செயலாக நடந்த தொடுதல்" என்று வாதிட்டார்.
எனினும், நீதவான் பெலிண்டா கோல்மேன் இந்த வாதத்தை நிராகரித்தார்.
மருத்துவர் வேண்டுமென்றே பாலியல் ரீதியாகத் தூண்டப்பட்டு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும், பாலியல் வரலாறு குறித்துக் கேட்பதற்கு எந்தவொரு மருத்துவக் காரணமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனது குற்றத்தை மறைப்பதற்காகவே மருத்துவர் அந்தப் போலி படிவத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார் என்பதையும் நீதவான் உறுதிப்படுத்தினார்.
ஆஸ்திரேலிய சுகாதாரப் பயிற்சியாளர் ஒழுங்குமுறை முகமையின் படி, அவர் இன்னும் பதிவுசெய்யப்பட்ட ஒரு மருத்துவ பயிற்சியாளராகவே உள்ளார்.
எனினும், அவரது இணையதள விபரக் குறிப்பில், அவர் தற்போது "ஆண் நோயாளிகளுக்கு மட்டுமே" சிகிச்சை அளிக்கிறார் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.