டார்வினின் வடக்கு புறநகர்ப் பகுதியில் திருநங்கையொருவரை கத்தியால் குத்திக் கொன்ற 36 வயது நபருக்கு, Northern Territory உச்ச நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையில், Andrew Mungatopi என்ற அந்த நபர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றாலும், 37 வயதான லினா (Lina) என்ற பெண்ணை திட்டமிடாமல் மரணம் விளைவித்த குற்றத்திற்காக (Manslaughter) அவர் குற்றவாளி என நடுவர் மன்றம் (Jury) தீர்ப்பளித்தது.
மரணமடைந்த லினா, டிவி தீவுகளைச் (Tiwi Islands) சேர்ந்த திருநங்கையாவார்.
கடந்த 2024 அக்டோபர் மாதம், மாலாக் (Malak) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது லினாவிற்கும், முங்கடோபியின் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியது.
முங்கடோபியின் நடத்தை குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளின்படி, அவர் சிறு வயதிலேயே தாயால் கைவிடப்பட்டு, உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்தவர் என்பதும், தந்தையின் அரவணைப்பு கிடைக்காதவர் என்பதும் தெரியவந்தது.
விசாரணையின் போது அதிகாரிகளுக்கு முங்கடோபி ஒத்துழைப்பு வழங்கியதைக் கணக்கில் கொண்டு, அவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 6 ஆண்டுகள் அவர் கட்டாயமாகச் சிறையில் இருக்க வேண்டும் .
முங்கடோபி வரும் 2030ஆம் ஆண்டு தான் நன்னடத்தை அடிப்படையில் பிணையில் வெளிவரத் தகுதி பெறுவார்.