ஆஸ்திரேலியா நிலப்பரப்பைத் தாக்கும் சீனாவின் ராணுவத் திறன் அதிகரித்து வருவதாகவும் ஆஸ்திரேலியாவின் வர்த்தக வழிகள், கடல்சார் கேபிள்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சீனா ஏற்கனவே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
வெளிநாட்டுக் கொள்கைக்கான சிந்தனைக் குழுவான Lowy Institute , பெய்ஜிங்கின் பிரம்மாண்ட ராணுவ வளர்ச்சியைக் கண்காணித்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனை ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு "வரலாற்று மாற்றம்" என்று அது விவரித்துள்ளது.
இருப்பினும், இந்த அறிக்கை சீனாவின் ராணுவத் திறனை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. சீனா ஆஸ்திரேலியா மீது தாக்குதல் நடத்துமா அல்லது மோதல் ஏற்படுமா என்பது குறித்த எந்த கணிப்புகளையும் இது வழங்கவில்லை.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
சீனா தனது கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஆஸ்திரேலியாவைத் தாக்க முடியும்.
மேலும், தென் சீனக் கடலில் உள்ள தனது செயற்கைத் தீவுகளில் இருந்து DF-26 ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்தி வடக்கு ஆஸ்திரேலியாவைத் தாக்கும் திறனை அது கொண்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பு முடக்கம்
இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் முக்கியப் பாதைகள் வழியாகச் செல்லும் ஆஸ்திரேலியாவின் வர்த்தக வழிகளை சீனாவால் முடக்க முடியும்.
மேலும், ஆஸ்திரேலியாவின் வணிகம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கு ஆதாரமாக விளங்கும் கடலடி கேபிள்களைத் துண்டிக்கவும், முக்கிய உள்கட்டமைப்புகள் மீது அதிநவீன சைபர் தாக்குதல்களை நடத்தவும் பெய்ஜிங்கிற்கு ஏற்கனவே திறன் உள்ளது.
பசிபிக் பிராந்தியத்தில் ராணுவத் தளம்
சீனா, பசிபிக் தீவு நாடுகளில் ராணுவத் தளங்களை அமைக்க 2018 முதல் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அங்கு ஒரு தளம் அமைக்கப்பட்டால், மத்திய ஆஸ்திரேலியா சீனாவின் குண்டுவீச்சு விமானங்களின் எல்லைக்குள் வரும் மற்றும் அடிக்கடி தாக்குதல்களை நடத்த வழிவகுக்கும். இது ஆஸ்திரேலியாவிற்கான ஆபத்தை "வியத்தகு முறையில்" அதிகரிக்கும்.
புதிய தொழில்நுட்பங்கள்
சீனா, ஆஸ்திரேலிய நிலப்பரப்பைத் தாக்கக்கூடிய புதிய H-20 ரக அதிதூர குண்டுவீச்சு விமானம் (H20 bomber) மற்றும் அணுஆயுதம் அல்லாத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) உருவாக்கி வருவதாக பென்டகன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவத் தளத்தை அமைப்பதைத் தடுப்பதற்காக, ஆஸ்திரேலிய மத்திய அரசு சீனாவுடன் ஒரு "நிரந்தரப் போட்டியில்" (Permanent contest) ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.