ஆஸ்திரேலியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்கள், தீவிரவாதம் மற்றும் கடுமையான சுரண்டல் (Exploitation) போன்ற பெரும் ஆபத்துகளை எதிர்கொண்டு வருவதாக Federal Police Commissioner கிறிஸ்டி பாரெட் எச்சரித்துள்ளார்.
இணையவழி குற்றங்களைத் தடுத்து, இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக உலக அளவிலான முன்னணி புலனாய்வு அமைப்புகளும், பெருநிறுவனங்களும் கைகோர்க்கவுள்ளன.
ஆஸ்திரேலிய Federal பொலிஸ் (AFP) மற்றும் ஆஸ்திரேலிய குற்றவியல் புலனாய்வு ஆணையம் (ACIC) ஆகியவற்றின் வழிகாட்டுதலில், (Five Eyes Law Enforcement Group - FELEG) கூட்டுப் பாதுகாப்பு அமைப்பும், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் கலந்துகொள்ளும் அவசர ஆலோசனைக் கூட்டம் ஜூன் 16 முதல் 18 வரை லண்டனில் நடைபெறவுள்ளது.
இதில் அமெரிக்காவின் FBI , பிரிட்டனின் தேசிய குற்றவியல் முகமை (NCA) உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் பங்கேற்கின்றன.
2024–25 நிதியாண்டில் மாத்திரம், சிறுவர் சுரண்டலுக்கு எதிரான ஆஸ்திரேலிய மையத்திற்கு, இணையவழி சிறுவர் சுரண்டல் குறித்து 82,764 முறைப்பாடுகளும், இணையவழி மிரட்டல் (Sextortion) குறித்து 1,325 முறைப்பாடுகளும்கிடைத்துள்ளன.
தற்போது குற்றக் கும்பல்கள் சிறுவர்களை தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு "ஒரு சேவைக்கான குற்றம்" (Crime as a service) என்ற வடிவில் பயன்படுத்தி வருவதாக ஆணையர் கவலை தெரிவித்துள்ளார்.
ஒரு சிறுவனுக்கு எரிபொருள் கேன் வாங்கப் பணிப்பது, இன்னொரு சிறுவனை கார் திருட வைப்பது, மூன்றாவது சிறுவனை வைத்து குறிப்பிட்ட இடத்தில் தீ வைக்கச் செய்வது என திட்டமிட்டு குற்றங்கள் பிரிக்கப்படுகின்றன.
இதற்காக அச்சிறுவர்களுக்கு மிகக் குறைந்த பணமே வழங்கப்படுகிறது. ஆனால், தாங்கள் செய்வது எவ்வளவு பெரிய கடுமையான குற்றம் என்பது அந்தப் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.
14 முதல் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்: இந்த வயதினரே இணைய உலகப் பின்னல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெண் பிள்ளைகள் மீதான கொடூரம்: இணையக் கும்பல்களால் பெண் பிள்ளைகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, தங்களைத்தாங்களே காயப்படுத்திக் கொள்ளவும், தங்களின் செல்லப் பிராணிகள் அல்லது உடன்பிறந்தவர்களைத் துன்புறுத்தவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
ஆண் பிள்ளைகளிடம் தீவிரவாதம்: இளம் சிறுவர்களிடையே வன்முறை மற்றும் தீவிரவாதத் தன்மையுடைய வீடியோக்கள் (தலை துண்டிப்பு, சித்திரவதை போன்றவை) புழங்குவது அதிகரித்துள்ளது.
2024 ஜனவரி முதல் இத்தகைய உள்ளடக்கங்களை வைத்திருப்பது குற்றமாக்கப்பட்டதை அடுத்து, 22 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாதப் போக்கு: 2020ஆம் ஆண்டு முதல் 63 இளைஞர்களின் தீவிரவாதப் போக்கு குறித்து விசாரிக்கப்பட்டு, 33 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடு (Neurodiversity) உள்ள குழந்தைகளே அதிகம் இலக்காக்கப்படுகின்றனர்.
இந்த ஆபத்துகள் எங்கு நிகழ்கின்றன?
ஆன்லைன் கேமிங் தளங்கள் (Gaming platforms), இணைய அரட்டை குழுக்கள் (Chat groups) மற்றும் ஏஐ சாட்போட்கள் (AI Chatbots) மூலமாகவே இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குழந்தைகளைக் குறிவைக்கின்றனர்.
இதனால்தான் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது என்று கூறும் ஆணையர் பாரெட், "தளங்கள் அவர்களிடம் உள்ளன, எனவே குற்றவாளிகளை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பப் பொறியியல் அவர்களிடம் மட்டுமே சாத்தியம்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆபத்துகள் ஏதோ வெளியில் நடப்பவை அல்ல, நமது சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இது உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.
கண்காணிப்பும் வெளிப்படைத்தன்மையும்: பிள்ளைகள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.