காசாவிற்கு உதவி வழங்கச் சென்ற ஆஸ்திரேலிய ஆர்வலர்கள், இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டபோது தங்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதைகள் இழைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP) விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், அது தொடர்பில் இஸ்ரேலியத் தூதர் Hillel Newman கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்த விசாரணை நேரத்தை வீணடிக்கும் ஒரு முயற்சி என்றும், சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து தங்களின் வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இஸ்ரேலியத் தரப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தாலும், ஆஸ்திரேலிய அரசு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையை உடைத்து, அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக Global Sumud Flotilla என்ற கப்பல் குழுவினர் கடந்த மே மாதம் கடல்வழியாகப் பயணம் மேற்கொண்டனர்.
மே 18 அன்று, இக்கப்பலில் இருந்த 11 ஆஸ்திரேலியர்கள் உட்பட சுமார் 400 பேரை இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.