Queensland மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பல நூறு கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்களை விநியோகிக்க விநியோகிக்க முற்பட்டனர் எனக் கூறப்படும் அறுவர்மீது federal பொலிஸார், வழக்கு தொடுத்துள்ளனர்.
"ஆபரேஷன் மின்ஜியாங்" Operation Minjiang என்ற விசேட கூட்டு அதிரடி நடவடிக்கையின் கீழ், Queensland குற்றத்தடுப்புப் பிரிவினர், பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் 178 கிலோ கொக்கைன் (Cocaine) மற்றும் 142 கிலோ ஐஸ்(Methamphetamine) ஆகிய போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் வடக்கு Queensland 'மிட்ஜ் பாயிண்ட்' (Midge Point) பகுதியில் உள்ள படகுத்துறை ஒன்றில் இருந்து 40 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை பொலிஸார் கண்டெடுத்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பமானது.
இந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பிரதான கப்பல் (Mothership) சாலமன் தீவு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு, மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மிட்ஜ் பாயிண்ட் பகுதிக்கு அருகே எரிக்கப்பட்ட நிலையில் ஒரு லொறி கண்டெடுக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளரான மேக்கே (Mackay) பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் கடந்த ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்டார்.
இவரே இந்த போதைப்பொருட்களை பிரிஸ்பேனுக்கு கடத்திச் செல்ல உதவினார் என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜூன் 9 பிரிஸ்பேனின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு ரகசிய பாதுகாப்பு இல்லத்தில் (Safehouse) இருந்து 1 கிலோ கொக்கைன் மற்றும் போதைப்பொருள் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு தங்கியிருந்த 32 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
சிட்னிக்கு போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் மற்றொரு 32 வயது நபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஜூன் 13 (ஈகில்பி பகுதி): ஈகில்பி பகுதியில் 28 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 'மவுண்ட் காட்டன்' (Mount Cotton) பகுதியில் உள்ள ஒரு வாகனத்தில் (Van) மறைத்து வைக்கப்பட்டிருந்த 178 கிலோ கொக்கைன் மற்றும் 142 கிலோ மெத்தம்பேட்டமைன் ஆகியன மீட்கப்பட்டன. இந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு இதில் தொடர்பில்லை என பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஹில்கிரெஸ்ட் பகுதியில் 28 வயது நபர் ஒருவரும், நேற்று சிட்னியின் கிரீன் வேலி பகுதியில் கடத்தலுக்கு உதவியாகச் செயல்பட்ட 24 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பிரிஸ்பேன் மற்றும் பீன்லீ (Beenleigh) நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்களில் ஒன்று இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.