டிரம்ப் நிர்வாகம் போரை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலை ஆஸ்திரேலியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் (Shadow Foreign Affairs Minister) டெட் ஓ'பிரையன் நியாயப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அவரது இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் தனது எல்லையைத் தாண்டி லெபனான் மீது நடத்தி வரும் ராணுவ விரிவாக்கத்தை நிறுத்த அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி, ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையேயான இந்த போரில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மிக முக்கிய கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடியுள்ளதுடன், "சண்டையை நிறுத்தவில்லை என்றால் அமைதி நீடிக்காது" என்றும் எச்சரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'இன்சைடர்ஸ்' (Insiders) நிகழ்ச்சியில் பேசிய டெட் ஓ'பிரையன், இந்த தற்காலிக அமைதி முயற்சி ஏன் சிக்கலாகியுள்ளது என்பதை விளக்கினார்.
"தற்போது லெபனானில் இருக்கும் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இருதரப்புமே அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஒப்பந்தத்தில் இல்லாத அமைப்புகள் இதில் ஈடுபட்டுள்ளதால், கள நிலவரம் நிச்சயமாக மேலும் சிக்கலடைகிறது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் முதல் விதியின்படி, லெபனான் உட்பட அனைத்து முன்னணிகளிலும் போரை "உடனடியாகவும் நிரந்தரமாகவும்" முடிவுக்குக் கொண்டுவருவதை உறுதி செய்ய அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெட் ஓ'பிரையனின் இந்த கருத்து ஆஸ்திரேலிய ஆளும் அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளது. இஸ்ரேல் லெபனானில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்பதில் ஆஸ்திரேலிய அரசு உறுதியாக உள்ளது.