பிரித்தானிய பிரதமரைப் போல ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று One Nation கட்சி தலைவர் Pauline Hanson வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது பொதுத் தேர்தல் (Federal election) நடத்தப்பட்டால், ஆளும் தொழிற்கட்சிக்கு கட்சிக்கும் (Labor Party) பாலின் ஹான்சனின் ஒன் நேஷன் (One Nation) கட்சிக்கும் இடையே
இடையில் கடும் போட்டி நிலவும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே ஆஸ்திரேலிய பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ராய் மோர்கன் (Roy Morgan) நடத்திய ஆய்வில், பாலின் ஹான்சன் 'தேசிய பிரஸ் கிளப்பில்' ஆற்றிய உரைக்குப் பிறகு அவரது ஒன் நேஷன் கட்சிக்கான முதன்மை ஆதரவு (Primary support) 2 சதவீதம் அதிகரித்து 31.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அவரது உரையில் கூறப்பட்ட பல தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று சோதனைகளில் (Fact-checking) தெரியவந்தபோதிலும் இந்த ஆதரவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இது ஆளும் தொழிற்கட்சியை விட அதிகமாகும். தொழிற் கட்சியின் ஆதரவு 1 சதவீதம் குறைந்து 27 சதவீதமாக உள்ளது. அதேநேரம், எதிர்க்கட்சியான கூட்டணிக் கட்சி (Coalition) 0.5 சதவீதம் உயர்வுடன் 17.5 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளது.
கூட்டணிக் கட்சிகளில், லிபரல் கட்சியின் (Liberals) ஆதரவு எவ்வித மாற்றமும் இன்றி 15 சதவீதமாகவும், நேஷனல்ஸ் கட்சியின் (Nationals) ஆதரவு 0.5 சதவீதம் அதிகரித்து 2.5 சதவீதமாகவும் உள்ளது.
பசுமைக் கட்சியின் (Greens) ஆதரவு 0.5 சதவீதம் குறைந்து 13.5 சதவீதமாகவும், சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு 1 சதவீதம் குறைந்து 10.5 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
ராய் மோர்கன் நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் , இரு கட்சிகளுக்கு இடையிலான விருப்பத் தேர்வின் அடிப்படையில் தொழிற் கட்சிக்கு 51 சதவீதமும், ஒன் நேஷன் கட்சிக்கு 49 சதவீதமும் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பதவி விலகிய பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரைப் (Keir Starmer) பின்பற்றி, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸும் பதவி விலக வேண்டும் என்று ஹான்சன் கோரியுள்ளார்.
திங்கட்கிழமை கான்பெராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"நான் அதை மிகவும் விரும்புவேன், ஆஸ்திரேலிய மக்களும் அதையே விரும்புகிறார்கள்.
ஆஸ்திரேலிய மக்களிடமிருந்து 4.8 மில்லியன் டாலர் ஆரம்ப நிதியைப் பெற்று நான் தொடங்கிய ' பையர் தி லையர்' (Fire the Liar) பிரச்சாரம் மூலம், அந்தோனி அல்பானிஸ் இனி இந்த நாட்டின் பிரதமராக நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது," என்றார்.
பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டிய ஹான்சன், குடியேற்றம் (Migration), வாழ்க்கைச் செலவு உயர்வு (Cost of living) மற்றும் அரசாங்கத்தின் கடன் ஆகியவற்றால் வாக்காளர்கள் சலிப்படைந்துள்ளனர் என்று கூறினார்.